"இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை"...சாலையில் சென்றவரின் உதவியால் மறுபிறவி!
Home > தமிழ் newsசென்னை தியாகராய நகரின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை,சாலையில் சென்றவரின் உதவியால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியது.
தியாகராய நகரின் மகாராஜபுரம் சந்தான சாலையில்,4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் இரண்டாவது தளத்தில் அருண்குமார் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அருண் ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுகிறார்.அருணிற்கு மாதத்தின் பெரும்பாலான நாட்கள் உணவகத்தில் பணி இருக்கும் என்பதால்,அவர் ஆரணியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும்,பரத் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
அருணின் மனைவி பரிமளா தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.அவர் வேலைக்கு சென்ற பின்பு,அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் அருகில் வசித்து வரும் உறவினர்கள் சிறுவன் பரத்தை கவனித்து கொள்வார்கள்.அவ்வாறு வியாழக்கிழமை காலை குழந்தை பரத் வீட்டில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கிச்சனில் இருக்கும் வேலையை கவனிப்பதற்க்காக பரிமளா வீட்டினுள் சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் பரத் பால்கனி இடைவெளி வழியாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளான்.விழுந்த வேகத்தில் குழந்தையானது வலியால் துடித்து கொண்டிருந்தது.அப்போது சாலையில் சென்ற ஒருவர்,குழந்தை விழுந்ததை கவனித்து ஓடி வந்து குழந்தையை துக்கியுள்ளார்.ஆனால் இதனை அறியாமல் பரிமளா கிச்சனில் தனது வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாததால் பதறி போன அவர்,குழந்தை விழுந்ததை அறிந்து அதிர்ந்து போனார்.
இந்நிலையில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குழந்தையின் நிலைமையை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளார். தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டபின் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் பரத். குழந்தையின் தலை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள்,தலையில் ஏற்பட்ட சிறிய காயத்தை தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லையெனக் கூறினர்.இதனால் குழந்தையின் தாய் பரிமளா மற்றும் உறவினர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மிக கடுமையாக உணர்த்தியுள்ளது.