கொடநாடு வீடியோ: ‘ஆதாரம் இதோ’- மு.க.ஸ்டாலின்; ‘களங்கப்படுத்தும் செயல் இது’-செம்மலை!

Home > தமிழ் news
By |

தெஹெல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார்.  அந்த ஆவணப்படம் தொடர்பான அடுத்தடுத்த செய்திகளும் அரசியலாளர்களின் கருத்துக்களும் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

கொடநாடு வீடியோ: ‘ஆதாரம் இதோ’- மு.க.ஸ்டாலின்; ‘களங்கப்படுத்தும் செயல் இது’-செம்மலை!

சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்படத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த தொடர்கொலைக்கு முதல்வர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்ததை அடுத்து, இதுபற்றி பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், விரைவில் இதன் பின்னால் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா தன் கட்சி நிர்வாகிகளிடம் சில ஆவணங்களைப் பெற்று கோடநாட்டில் வைத்திருந்தாகவும் அந்த வீடியோவில் இருந்ததாகவும், ஆனால் அப்படியான எவ்வித ஆவணங்களையும் ஜெயலலிதா வைத்திருக்கவில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உண்மையான விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவரும் என்றும், திமுகவுக்கு தங்கள் மீது வழக்கு போடுவதுதான் வேலை என்றும் ஜெயலலிதா இருக்கும் உள்ளாட்சி நடத்துவதை தடுத்த ஸ்டாலின், தற்போது அதிமுக ஆட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்த தாமதிப்பது பற்றி கருத்து கூறுவதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ‘அம்மையார் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு அவர் கொடநாடு எஸ்டேட்டில் வைத்திருந்த பணம், ஆவணங்களை கைப்பற்ற கொலைகளை செய்திருக்கிறதாம் எடப்பாடி அரசு ஆதாரம் இதோ! உடனடியாக முதல்வர் பதவி விலகிட வேண்டும்.அவர்களைக் காப்பாற்றுகிற மத்திய அரசும் பதில் சொல்லியாக வேண்டும்' என்று பதிவிட்டு அந்த ஆவணப்படத்தையும் இணைத்துள்ளார்.

இந்த வீடியோ பற்றி பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, ‘இதுபோன்ற புலனாய்வு பத்திரிகையில் சொல்லியிருப்பதுவும், அந்த கொடநாடு வீடியோவும் உண்மை என்று எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்’ என்று கேள்வி எழுப்பியவர்,  இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த ஆட்சி மீதும், முதல்வர் மீதும் களங்கம் ஏற்படுத்துவதற்காக செய்யும் யாருடைய எண்ணமும் ஈடேறாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயன் இருவரும் தமிழக காவல் துறையால் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

MKSTALIN, JAYALALITHAA, EDAPPADIKPALANISWAMI, AIADMK, DMK, MATHEWS, TEHELKAJOURNALIST, KODANADESTATE