பிளாஸ்டிக் தடை.. சொந்த செலவில் தூக்குவாளிகள் தந்து அசத்தும் வியாபாரிகள்!
Home > தமிழ் newsதமிழ்நாடு முழுக்க, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ள, குறிப்பிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் இன்றுமுதல் தடைசெய்யப்பட்ட நிலையில், ஆங்காங்கே வியாபாரிகள் பலரும் துணிப்பைகளை பயன்படுத்தவும், விநியோகிக்கவும் தொடங்கிவிட்டனர். பலர் வீட்டில் இருந்து துணி பைகளை எடுத்துவரும்படி தங்கள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பால் வியாபாரி தனபால் என்பவர் பாலை பாக்கெட்டில் தருவதற்கு பதிலாக, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள எவர்சில்வர் தூக்குவாளிகள் வாங்கி, அவற்றில் வாடிக்கையாளர்களுக்கு பால் அளந்து ஊற்றித் தரும் விஷயம் பரவலாக பேசப்படுகிறது. 15 வருடமாக பால் வியாபாரம் செய்து வரும் இவருடைய கடைக்கு தினமும் சுமார் 300 பேர் பால் வாங்க வருகின்றனர். அத்தனை பேருக்கும் புதுவருட நாளை முன்னிட்டும், பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டும் தூக்குவாளிகளில் பால் தந்துள்ள நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இதேபோல் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில், தேநீர் கடை ஒன்றில் டீ வாங்க வருவோருக்கு, ரூ.150 முன்பணம் வசூலிக்கப்பட்டு, தூக்குவாளியில் டீ தரப்பட்டது. இங்கு பாத்திரத்தை திரும்பக் கொடுப்பவர்களுக்கு முன்பணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. புதுவருடத்தில் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து விலகுவதற்கான முதல் படியை வியாபாரிகள் எடுத்து வைத்துள்ளது ஆரோக்கியமான விஷயமாக பலரும் கருதுகின்றனர்.