8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுகிறதா அரசு?: அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்கள்!
Home > தமிழ் newsதமிழ்நாட்டில் வழங்கப்பட்டுவரும் சத்துணவினால் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுமார் 50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். இதற்காக ஏறக்குறைய 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் மதிய உணவுத் திட்ட கண்காணிப்பில் உள்ளன. இப்போது அவற்றில் 8,000 மையங்களை மூடப்போவதாக அரசு அறிவித்துள்ளதாக வந்த செய்தி, ஏழை பெற்றோர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமையில் இருப்பவருக்கு பசியைப் போக்கினால்தான் படிப்பறிவு ஏறும் என்கிற அடிப்படையில், முதலில் மதிய உணவு அளிக்கும் நடைமுறையானது முன்னாள் முதல்வர் காமராஜரால் கொண்டுவரப்பட்டது. அதுதான் அன்றைய `இலவச மதிய உணவுத் திட்டம்' . இதனால் பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் அப்போது பெருகினர்.
இன்று தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உயர் பதவியை அடைந்த பலரும் அக்காலத்தில் படிக்க வசதி இல்லாதபோது, மதிய உணவுக்காக பள்ளிக்குச் சென்று அதன் பின் படித்து உயர்ந்ததாக கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அத்தகைய மதிய உணவுத் திட்டம் `சத்துணவுத் திட்டமாக' எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் மாற்றப்பட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், பெருகி வரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்க்கப்படுவதால், தற்போது 25-க்கும் குறைவாக குழந்தைகள் எண்ணிக்கை இருக்கும் சத்துணவு மையங்கள் அதிகரித்துள்ளன. இங்கு முட்டை, இணை உணவு மாவு, புலவு சாதம் உள்ளிட்டவற்றை அளித்துக்கொண்டிருந்த அரசு, இந்த 8000 மையங்களை மூடப்போவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இதுபற்றி அரசு தரப்பில் இருந்து வெளிவந்த சுற்றறிக்கையின்படி, அந்த மையங்களில் இருக்கும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டோரை மட்டுமே மாற்றுவதாகவும், அந்த 8000 மையங்களை மூடும் யோசனை அரசுக்கு இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 25-க்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட குழந்தைகள் இருக்கும் மையத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளரை, காலியாக உள்ள மையத்துக்கு கலந்தாய்வு மற்றும் விருப்பத்தின்பேரில் மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.