சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பிரஞ்சன் காலமானார்!
Home > தமிழ் newsதமிழின் முக்கிய எழுத்தாளரும் விமர்சகருமான பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக இன்று காலமானார். 57 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளராகவும், விமர்சகராகவும் இயங்கி வந்ததோடு விகடன், இந்து, குமுதம் போன்ற பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதியும் வந்தவர் பிரபஞ்சன்.
புதுவையில் பிறந்து கடலூர், சென்னை - திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் வசித்த எழுத்தாளர் பிரபஞ்சன் வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள், 1995-ஆம் ஆண்டு, இவர் எழுதிய வானம் வசப்படும் நூலுக்காக சாகிதிய அகாதமி விருது பெற்றார்.
தவிர பாரதிய பாஷா பரிஷத் விருது, கஸ்தூரி ரங்கம்மாள் விருது, இலக்கியச் சிந்தனை விருது, சி.பா.ஆதித்தனார் விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு உட்பட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற பிரபஞ்சன், கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 73.