BGM Biggest icon tamil cinema BNS Banner

காவிரி வெள்ளத்தில் 'செல்பி எடுப்பது-மீன் பிடிப்பது' கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

Home > தமிழ் news
By |
காவிரி வெள்ளத்தில் 'செல்பி எடுப்பது-மீன் பிடிப்பது' கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு சென்னையில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கேரள,கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் இன்னும் 2 தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் கடந்த 9-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 13 மற்றும் 14-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,'' இவ்வாறு அவர் பேசினார்.