வர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா?
Home > தமிழ் news
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் நவம்பர் 14-15 ஆகிய தேதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கஜா புயலானது கடலூரின் பரங்கிப் பேட்டையில் கரையைக் கடக்கும் என்று ஐரோப்பிய வானியல் வல்லுநர்களின் தகவலை அடுத்து இந்த அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையத்தினால் உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பெயரான கஜா என்கிற பெயர் வைக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதனால், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல், 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் இந்த புயல் நவம்பர் 14-15 தேதிகளில் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்துக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.