குற்றப்பின்னணி எம்.பி,எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

Home > தமிழ் news
By |
குற்றப்பின்னணி எம்.பி,எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்களை விசாரிப்பதற்காக சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா தொடுத்த பொதுநல வழக்கு ஒன்றில், 'குற்றப்பின்னணி கொண்ட எம்.பி,எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக்கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று `குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

 

இந்த நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு  7.80 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் இரண்டு நீதிமன்றங்கள் எம்.பி-க்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் என்றும், எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா,பீகார்,கர்நாடகா,கேரளா,மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

17 ஊழியர்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக மாவட்ட நீதிபதி அந்தஸ்துள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒரு வருடத்துக்குள் 100 வழக்குகளையாவது விசாரித்து முடிக்க வேண்டும் என,உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்டங்களில் பதியப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படவுள்ளன. 74 எம்.எல்.ஏ-க்கள் மீதான 240-க்கும் மேற்பட்ட வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.