பாஜகவை விமர்சித்த சோபியாவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன்: தூத்துக்குடி நீதிமன்றம்!

Home > தமிழ் news
By |
பாஜகவை விமர்சித்த சோபியாவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன்: தூத்துக்குடி நீதிமன்றம்!

திருநெல்வேலிக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, சென்னை - தூத்துக்குடி விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பயணித்தார். அவருக்கு பின்னால் சற்று தூரம் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த, கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் சோபியா என்கிற மாணவி பாஜகவின் பாசிசம் ஒழிக என்பது போன்ற கோஷத்தை எழுப்பியதாகவும், அது தொடர்பான ட்வீட்டையும் பதிவிட்டு தமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்பட்டது.

 

இதனை அடுத்து, தமிழிசை சவுந்தர்ராஜன் அளித்த புகாரின்பேரில், சோபியா கைது செய்யப்பட்டு தூத்துக்குடி நடுவர் நீதிமன்றத்தினால் 15 நாள் சிறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். அதைத் தொடர்ந்து உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்ட சோபியா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், சீமான் உள்ளிட்ட அரசியலாளர்களும் சோபியாவின் கைதுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், சோபியாவின் தந்தை தூத்துக்குடியில் அளித்த புகார் மற்றும் சோபியாவின் வழக்கறிஞர் ஆகியோரின்  தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கு வாதங்களின் அடிப்படையில்,  இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணை செய்யப்பட்ட இவ்வழக்கில் சுமார் 12 மணி அளவில், உடல்நிலை சரியில்லாத சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.