தற்கொலை செய்துகொண்டவரின் ‘தலை’ 110 கி.மீ ரயிலில் பயணித்த சம்பவம்!

Home > தமிழ் news
By |

பெங்களூரில் ரயில் என்ஜினில் சிக்கி இறந்த மனிதரின் தலை ஒன்று 110 கி.மீ வரை ரயிலுடனே வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தற்கொலை செய்துகொண்டவரின் ‘தலை’ 110 கி.மீ ரயிலில் பயணித்த சம்பவம்!

பெங்களூரின் சிக்கமங்களூரு மாவட்டத்தின் பிரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் பொதுவாக, எப்பவும் போல ரயிலை சோதனை செய்துள்ளனர். ஆனால் ரயிலின் சக்கரங்களில் அங்கங்கே ஏதோ சிக்கியிருப்பது போல் தெரிந்ததும் கொஞ்சம் விரிவாக ஆராயத்தொடங்கினர். அப்போதுதான் ரயிலின் என்ஜினில் உள்ள ஸ்பிரிங் பகுதிக்கு இடையில் என்ஜினின் அடிப்பகுதியில் மனித  தலை ஒன்று சிக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் அளித்ததுடன், காவல்துறையினரின்  உதவியுடன் உடனடியாக அந்த மனித தலையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே ராணிபென்னூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு போன் வந்துள்ளது. அதன்படி தங்கள் ரயில் நிலையத்தில், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஒருவரது தலையை அவர்கள் தேடுவதாகக் குறிப்பிட்டதை அடுத்து, நடந்தது ஒரு தற்கொலை என்று அறியப்பட்டது.

பின்னர், இறந்தவரின் உறவினர்கள் வந்து, அந்த மனித தலையை பார்த்து உறுதி செய்ததை அடுத்தும், பிரேத பரிசோதனைக்கு பிறகும், உறவினர்களிடம் தலை ஒப்படைக்கப்பட்டது.  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஒன்றில் சமையலராக வேலைபார்த்து வந்த 31 வயதான குமார் பரஷப்பா தளவார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது தலையில்லாத உடல் மட்டும் அவரது உறவினர்களால் சனிக்கிழமை அன்று புதைக்கப்பட்டது. அதன் பின்னர் தலை கிடைத்த பிறகு மீண்டும், குமாரின் நினைவிடத்தை தோண்டி ஏற்கனவே புதைக்கப்பட்ட உடலுடன் சேர்த்து அவரது உறவினர்கள் தற்போது கிடைத்த தலையை புதைத்துள்ளனர்.

இதேபோல் சில தினங்களுக்கு முன், கோயமுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமாக செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் முகப்பில் உள்ள இடுக்கில் ஆண் ஒருவரின் சடலம் சிக்குண்டு இருந்ததை ரயில் நெல்லையை அடைந்தபோது அனைவரும் கண்டு உறைந்து போகினர். அந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TRAINACCIDENT, TRAIN, BENGALURU, BIZARRE