100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த சொகுசு கார்.. தூக்கிவீசப்பட்ட வாலிபர்.. பதறவைக்கும் காட்சிகள்!
Home > News Shots > தமிழ் newsகோவையில் சொகுசுக்காரில் வேகமாக சென்ற பெண் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவினாசி அருகே உள்ள கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த தொழிற்காட்சியகத்தைச் சுற்றி 4 -க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும், 5 கல்லூரிகளும் உள்ளன. இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களையும், கார்களையும் போட்டிப் போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4.42 மணியளவில் TN 38 AJ,1383 என்ற சொகுசு காரும் மற்றொரு சொகுசு காரும் போட்டிப் போட்டுக்கொண்டு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சியகம் சாலை வழியாக சென்றுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஜென்னி கிளப் பகுதியை நோக்கி திரும்பியுள்ளார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் இரு சக்கரத்தில் சென்ற இளைஞரின் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இதில் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை அருகில் இருந்தவர்கள் துரத்தி பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கார் வேகமாக சென்றதால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போக்குவரத்து போலிஸார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்து, விபத்தை ஏற்படுத்தியவர் கல்லூரி மாணவி தட்சணா ரூத் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர் கல்லூரி மாணவர் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. பாலாஜி தற்போது தனியார் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.