கோபாலபுரம் இல்லத்திற்கு பிரபல தலைவர்கள் 'நேரில் வருகை' .. தொண்டர்கள் உருக்கம்!
Home > தமிழ் newsதிமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சளித்தொல்லை காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை செய்து வருகிறது.
வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல் நலிவு ஏற்பட்டுள்ளது என்றும்,சிறுநீரகத்தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும், காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் அவரின் வீட்டுக்கு முன்பாக குவியத்தொடங்கியுள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறியும் பொருட்டு அவரது இல்லத்துக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மதிமுக தலைவர் வைகோ,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தா.பாண்டியன்,பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், குஷ்பூ என ஏராளமான தலைவர்கள் நேரில் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனால் கலைஞர் வீட்டுக்கு செல்லும் வழியிலும் அவரின் வீட்டுக்கு முன்பாகவும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நடிகர் விக்ரம் சற்றுநேரத்துக்கு முன் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். முன்னதாக நடிகர் ராதாரவி இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர் ஆகியோர் கலைஞரின் உடல்நலம் குறித்து அறிய நேரில் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.