ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 10 பேர் நேற்று துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகினர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்,144 தடை உத்தரவை வரும் மே 25-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்-ஒழுங்கை பராமரித்திட இன்று (23-ந்தேதி) 1 மணி முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

 

இந்த தடை உத்தரவு தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் அமல்படுத்தி உத்தரவிடப்படுகிறது.

 

இதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் வாகனங்களில் பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும், சாதி கொடிக்கம்புகள் கொண்டு செல்வதற்கும், வாடகை வாகனங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து செல்வதற்கும் 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

 

இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS