தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ள சத்யம் சினிமாஸ்...!
Home > தமிழ் newsசென்னையின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று சத்யம் சினிமாஸ். ராயப்பேட்டையில் அமைந்துள்ள இத்திரையரங்கில் படம் பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் மிகப்பிரபலம்.
இந்நிலையில் பிவிஆர் திரையரங்கம் சென்னை சத்யம் திரையரங்கத்தின் 77.1 சதவிகிதப் பங்குகளை வாங்கவுள்ளது. இதையடுத்து சத்யம் சினிமாஸ் திரையரங்கம் விரைவில் பிவிஆர் நிறுவனத்துடன் இணையவுள்ளது.இதற்காக சத்யம் திரையரங்குக்கு ரூ. 850 கோடி கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது இத்திரையரங்கை மிகவும் உணர்வுபூர்வமாக எண்ணும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவும்,ஆச்சரியமாகவும் அமைந்தது.
இந்நிலையில் சத்யம் சினிமாஸின் தலைமைச் செயல் அதிகாரி கிரண் ரெட்டி சத்தியம் சினிமாஸ் ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்:
"இருபது வருடங்களுக்கு முன்பு, சத்யம் திரையரங்குகளான சத்யம், சாந்தம், சுபம் ஆகியவற்றை விரிவுபடுத்தும்போது ஒரு புதிய பயணத்துக்குத் தயாராகிறோம் என்று நாங்கள் அவ்வளவாக அறியவில்லை.
அதற்குப் பிறகு அற்புதமான பயணம். பல சாதனைகளை அடைந்தோம். எல்லாவற்றிலும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தது உங்களுடைய ஆதரவுதான். கடந்த இருபது வருடங்களில் நாங்கள் சாதித்தவற்றுக்குக் காரணம், நீங்கள்தான். சத்யம் பிராண்ட் என்பது சென்னை மக்களுக்கு உரித்தானது. பாப்கார்ன், கோல்ட் காபி மீதான விருப்பங்கள், திரையரங்கு குறித்த குறைகளைத் தெரிவித்தது என சத்யம் சினிமாஸின் இன்றைய நிலைக்கு நீங்களே காரணம். இதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
தற்போது இன்னொரு கட்டத்துக்கு நகர்ந்துள்ளோம். பி.வி.ஆர். சினிமாஸுடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதனால் எஸ்பிஐ நிறுவனத்துக்கு என்ன பயன் என்ன நீங்கள் எண்ணலாம். இது வணிக ரீதியான முடிவு மட்டுமல்ல. ஒரு பெரிய திட்டத்துடன் இது அமைந்துள்ளது. இரு வெற்றிகரமான பிராண்டுகளை இணைத்து அதன் பலங்களைக் கொண்டு படம் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
இது புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என நம்புகிறோம். சத்யம் சினிமாஸின் கலாசாரம் தொடர்ந்து இயங்கும். ஸ்வரூப்பும் நானும் இணைந்து நீங்கள் படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கி, நீங்கள் விரும்பியதைப் பாதுகாப்போம். உணவு முதற்கொண்டு தரத்திலான உறுதி வரை எல்லாமே தொடர்ந்து நீடிக்கும்" என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.