'மைண்ட்வாய்ஸ்னு நெனைச்சது, ஸ்டெம்ப் மைக்ல பதிவாயிடுச்சு'.. மன்னித்த தென்னாப்ரிக்கா!
Home > தமிழ் newsதென்னாப்ரிக்க வீரர் பெலுக்வயோவைப் பார்த்து, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது நிறவெறித் தூண்டுதலை ஏற்படுத்தும் விதமாக இழிவுபடுத்தி பேசிய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு உலகம் முழுவதும் பெரும் கண்டனங்களை எதிர்கொண்டது.
தென்னாப்ரிக்காவின் மெக்லீன் மைதானத்தில், தென்னாப்ரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது, ‘ஏய் கருப்பு பயலே, இன்றைக்கு உனது தாய் எங்கே உட்கார்ந்திருக்கிறாள், அவரிடம் உனக்காக வேண்டிக்கொள்ளச் சொன்னாயா? என்ன வேண்டிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாய்? என்று சர்ஃப்ரஸ் பேசியது’ அங்கிருந்த ஸ்டெம்பில் பொருத்தப்பட்ட மைக் மூலம் வெளிவந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன், தான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் யாருக்கும் கேட்க வேண்டும் என்று நினைத்து பேசவில்லை. எனக்குள்ளேயே பேசிக்கொண்டது துரதிர்ஷ்டவசமாக ஸ்டெம்பின் மைக்கில் பதிவாகியதால் இந்த விளைவு உண்டாகிவிட்டது என்றவர், இனிமேல் இவ்வாறான தவறான விஷயங்கள் நிகழாது என்றும் தெரிவித்துள்ளார்.
சர்ஃப்ரஸ் அஹமதுவின் இந்த மன்னிப்பு கோரிக்கைக்கு பதில் அளித்த தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளீசிஸ், ‘ பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸ் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நாங்கள் மன்னிக்கிறோம். ஆனால் அதற்காக சாதாரணமாக இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டோம் என்று நினைக்க வேண்டாம்’ என்று கூறினார்.
மேலும் பேசியவர், ‘தென்னாப்ரிக்காவுக்கு விளையாட வரும் எந்த நாட்டு வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் பேச்சில் எதைப் பேசுகிறோம் என்கிற விழிப்பும் கவனமும் இருக்க வேண்டும். உண்மையில் பெலுக்வயோவுக்கு மொழி தெரியாததால் அவருக்கு இது புரியவுமில்லை, அவர் கருத்து சொல்லவுமில்லை’ என்று கூறினார்.