கடவுளின் தேசத்தை கைவிடுகிறதா இயற்கை ?.. வறட்சியை நோக்கி செல்லும் கேரளா!

Home > தமிழ் news
By |
கடவுளின் தேசத்தை கைவிடுகிறதா இயற்கை ?.. வறட்சியை நோக்கி செல்லும் கேரளா!

கேரள வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பெரும் மழை பெய்தது.இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். கடந்த சிலவாரங்களாக மக்கள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

 

இந்நிலையில் தற்போது கேரள மக்களை  வரலாறு காணாத கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இது அம்மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் கிணறுகள், ஆறுகளிலும்  நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது என கேரள மக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.இதுகுறித்து ஆய்வு நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கடும் மழையின் பாதிப்பிலிருந்து கேரள மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.அதற்குள் கோடை போல வெயில் உக்கிரமாக உள்ளது.மேலும் அங்குள்ள நீர்நிலைகள், ஆறுகள், குளங்களில் நீர் இருப்பானது கடுமையாகக் குறைந்து வருகிறது.கேரளாவின் முக்கியமான ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை போன்றவற்றில் மழையின் போது வெள்ளமானது ஆர்ப்பரித்துச்  சென்றது.ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக இருக்கிறது.தற்போது தண்ணீரானது மிகக்குறைந்த அளவே ஆறுகளில்  செல்கிறது.

 

வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறு மற்றும் குளங்களிலும்  நீரின் அளவு மிகக்குறைந்து காணப்படுகிறது.சில வாரங்களுக்கு முன் அங்குள்ள கிணறுகளில் தண்ணீரானது மேல் மட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திடீர் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய கேரள அறிவியல்,தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது நிலவும் கடும் வறட்சி,வெப்பம் அம்மாநில மக்கள் மற்றும் விவசாயிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

KERALA, KERALAFLOOD, WELLS DRY UP