'திருநா, திருமா'வுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தற்செயலான நிகழ்வா?..வைரல் போட்டோ!
Home > தமிழ் newsதமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை, அவரது இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் சந்திக்கச் சென்றபோது, ஏற்கனவே அங்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இருந்ததை அடுத்து, மூவரும் ஒன்றாக சந்தித்துள்ள தற்செயலான நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தமிழகத்தில் வைரலாகி வருகிறது.
மிக அண்மையில் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் விலக்கப்பட்டார். திருமாவளவனுடனும், திமுகவுடனும் நட்பாக இருந்துவரும் திருநாவுக்கரசர் லோக்சபா தேர்தல் கூட்டணியில் யாருடனும் இல்லை என்பது புலப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ரஜினியை, அங்கிருந்தபோது மரியாதை நிமித்தமாக போய் பார்த்ததாகவும், அவர் தனது 40 ஆண்டுகால நண்பர் என்றும் திருநாவுக்காரசர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பி வரும் இந்த சந்திப்பு உண்மையில் எதற்காக நடந்தது என்று சில முன்னணி பத்திரிகையாளர்கள் விசாரித்துள்ளனர். அப்போதுதான் ரஜினிகாந்த் தனது 2-வது மகளான சௌந்தர்யாவின் மறுமணத்திற்கான பத்திரிகையை கொடுப்பதற்காக ரஜினி தனது நண்பரான திருநாவுக்கரசர் வீட்டுக்கு சென்றதும், அங்கு திருமாவளவன் இருந்ததும், பிறகு மூவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த புகைப்படத்தை பொருத்தவரை, ரஜினியின் அரசியல் எண்ட்ரியின்போது, ‘கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்பும் பலம் ரஜினிக்கு இருக்கிறது’ என்று சொன்ன திருமாவளவனும் (ரஜினியின் ஆன்மீக அரசியல் பிரவேசம் அறிவிக்கப்பட்டவுடன், பின்னாளில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்), 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தபோது அதை முதலில் வரவேற்ற திருநாவுக்கரசரும் ரஜினியுடன் நிற்கிறார்கள். எனினும் இந்த சந்திப்பு குறித்து ரஜினி, திருநா, திருமா உள்ளிட்ட மூவரின் தரப்பில் இருந்தும் எவ்வித விளக்கமும் இன்னும் வெளிவராத காரணத்தாலேயே இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.