கலெக்டர் பதவிக்கு முழுக்கு... பாஜகவில் இணைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி !
Home > தமிழ் newsஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கி சட்டிஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான அஜித் ஜோகியின் பாதையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராய்ப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஓம் பிரகாஷ் சவுத்ரி.
2005ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவட்டத்தில் பின்தங்கிய வகுப்பில் பிறந்தவர்.ஐஏஎஸ் அதிகாரியான பின்பு பழங்குடி மக்களுக்காக இவர் முன்னெடுத்த பல திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சட்டீஸ்கரின் தான்டேவாடா உள்ளிட்ட சில மாவட்டங்கள் நக்சலைட்டு அமைப்புகளால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளாகும்.இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாவட்ட கலெக்டராக ஓம் பிரகாஷ் சவுத்ரி பணியாற்றினார். அப்போது, நக்சலைட்டுகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
நக்சல் பாதித்த பகுதிகளில் பழங்குடியினர் கல்வி பயில தனிக்கவனம் செலுத்தினார். அவர்களுக்கு பல அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்.இதன் மூலம் அவர் மாநில அளவில் பிரபலமானார். இந்த சேவையைப் பாராட்டி, அவருக்கு மத்திய அரசு விருது அளித்தது.
இந்நிலையில் கடந்த சில மாதமாக அவர் பாஜகவில் இணைய போவதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.இந்நிலையில் அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய போவதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் 'கடந்த 13 ஆண்டுகளாக சட்டீஸ்கர் மாநில மக்களுக்காக பணியாற்றினேன். கலெக்டராக எனது பணியை திருப்திகரமாக செய்தேன். ஆனால், அந்தப் பதவியில் சில வரைமுறைகள் உள்ளன. எனது மக்கள் மற்றும் மண்ணிற்காக அதிகம் பணியாற்ற விரும்புகிறேன். அதனால், கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது, இந்நிலையில் ராய்கர் மாவட்டத்திலுள்ள காரிசா தொகுதியில் பாஜக சார்பில் ஓம் பிரகாஷ் சவுத்ரி களம் இறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்கர் மாவட்டம், காங்கிரசின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.