முடிவுக்கு வந்த 6 நாள் தர்ணா.. முதல்வரும் கிரண்பேடியும் பேசிக்கொண்டது என்ன?
Home > தமிழ் newsபுதுச்சேரியில் தனது மக்கள் நலத்திட்டங்களுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்ததாகக் கூறி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தலைமைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் தொடர்ந்து 6 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர்கள் மற்றும் துணைநிலை ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க, முதல்வர நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சட்டப் பேரவையில் தங்களது கூட்டணிக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர், அரசின் ரோடியார் பஞ்சாலையை திரும்பவும் திறக்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்த 10,000 பேருக்கு விதவை மற்றும் முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும், இலவச அரிசிக்கு பதில் தற்போது பணம் வழங்கப்பட்டு வருகிறது- ஆனால் அதற்கு பதிலாக இலவச அரிசியையே திரும்பவும் வழங்கப்பட வேண்டும், போலீஸ் பணியிடங்களுக்கான வயது உச்சவரம்பு 22 லிருந்து 24 ஆக உயர்த்துவது உள்ளிட்ட 39 கோரிக்கைகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் முன்பாக வைத்ததாகவும் அதற்கெல்லாம் அவர் சம்மதம் தெரிவித்ததால் தாங்கள் இந்த தர்ணாவை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்.
இதுபற்றி பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ராஜ் நிவாஸ் முன் நடந்த தர்ணா முடிவுக்கு வந்ததாகவும் முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சந்தித்ததால் சில பிரச்சனைகள் தீருவதற்கான ஆயத்தம் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் கடந்த 6 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி மாநிலம் தற்போது மீண்டும் அரசுப்பணிகளுக்குத் திரும்புவதாகவும் இனி ஆளுநர் மாளிகையை விசிட்டர்கள் வந்து பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.