'அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு நிகழ்ந்த கொடூரம்'...ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய ஊழியர் சஸ்பெண்ட்!
Home > தமிழ் newsஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு, எச்.ஐ.வி., ரத்தம் செலுத்திய அதிர்ச்சி சம்பவம் சாத்தூரில் நடந்துள்ளது.அதற்கு காரணமான ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார்.இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் அவருக்கு ரத்த குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.கர்ப்பிணியான அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் எனவும் அப்போதுதான் உடல் நிலை சீராக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இதனையடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு செலுத்தப்பட்டது.ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார்.தொடர்ந்து அவருடைய உடல்நிலை மோசமடைய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.அதில் கர்ப்பிணியான அவருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் ஹெச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையின் முடிவில் ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட்டார். தவிர, 2 ஒப்பந்த ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கர்ப்பிணி பெண்ணிற்கு கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும்,குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பரவாமல் இருக்கும்படி சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் நிவாரணம் மற்றும் சிகிச்சை அளித்தாலும் செய்யாத தவறுக்காக,கர்ப்பிணி பெண்ணும் அவரது குடும்பமும் நிலைகுலைந்து போயிருக்கிறது.