‘இருந்தாலும் நீங்க எப்படி அப்படி பேசலாம்?’.. இந்திய வீரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
Home > தமிழ் newsடிவி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரண் ஜோகர் தொகுத்து வழங்கும், காபி வித் கரண் நிகழ்ச்சியில் கடந்த டிசம்பர் மாதம் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதை அடுத்து பெரும் இன்னலுக்கு இருவரும் ஆளாகினர். இதற்கு கரண் ஜோகரும் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்த சமயம், பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக சஸ்பெண்டு செய்தது. அதன் பிறகு பல்வேறு பரிசீலனைகளுக்கு அடுத்து இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இடையில் ஹர்திக் பாண்ட்யா வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை என்று அவரது தந்தை மனம் உருகி பேட்டி அளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 4-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருந்தது.
மேலும் ஹர்திக் பாண்ட்யாவின் பெர்ஃபார்மென்ஸ் ஹர்திக் மீதான களங்கத்தை மறக்கடிக்கச் செய்து வரும் இந்த நேரத்தில் பெண்கள் குறித்த சர்ச்சைக் கருத்துக்களை டிவி நிகழ்ச்சியில் பேசியதற்காக, ஹர்திக் மற்றும் கே.எல்.ராகுல் இருவர் மீதும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.