Looks like you've blocked notifications!

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெறுவதாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில்தான் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. 

 

நிர்மலாதேவிக்காகக் குளிரூட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத்துறை தலைவராகவும் பல்கலைக்கழகமானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநருமான வி.கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கு 10 நாள்களுக்கும் மேலாகத் தங்கி, அவரது சொந்த வேலைகளைக் கவனித்திருக்கிறார்.

 

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது எளிதாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

 

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல 95241 36928 என்ற செல்பேசி எண்ணில் நிர்மலா தேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.

 

நிர்மலா தேவி வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் ராமதாசின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | APR 17, 2018 5:02 PM #NIRMALA DEVI #RAMADOSS #MADURAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS