‘போதும் நிறுத்துங்கயா.. நான் நல்லாத்தேன் இருக்கேன்’.. சீறிப் பாய்ந்த ‘சின்ன தல’!

Home > News Shots > தமிழ் news
By |

சென்னை சூப்பர் கிங்ஸின் ‘சின்ன தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் இறந்துவிட்டதாக வெளியான தகவல்கள் குறித்த வீடியோக்களின் உண்மை நிலவரம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

‘போதும் நிறுத்துங்கயா.. நான் நல்லாத்தேன் இருக்கேன்’.. சீறிப் பாய்ந்த ‘சின்ன தல’!

கடந்த சில தினங்களாகவே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலவி வந்தன. இது தவிர சிலர் அவருக்கு விபத்து நடந்ததற்கான ஆதார வீடியோக்கள், போட்டோக்கள் என பலவற்றையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் தனக்கு ஏதும் ஆகவில்லை என்பதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடனும், ஆவேசத்துடனும் பதிவிட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டு வருபவர் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல என அழைக்கப்படும் இவர், மோசமான பேட்டிங் காரணமாக தற்போது இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த இவர், சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து போனதாக தகவல் வெளியானதை அடுத்து, அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் கடவுள் ஆசீர்வாதத்தால் நலமுடன் இருப்பதாகவும், தனது பெற்றோர், நண்பர்கள் என அனைவரும் இந்த வதந்திகளால் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வருத்தமுடன் தன் நலத்தை குறித்தும், இந்த வதந்தியால் தன்னுடன் இருப்பவர்களின் நிலை குறித்தும் பேசியுள்ளார்.

மேலும், தனக்கு மிகுந்த வலியை கொடுத்த இந்த சம்பவத்திலிருந்து மீளும் வகையில் அவரது ரசிகர்கள் பலர் மீண்டும் அவர் ஆட்டக்களத்தில் வந்து ஆடவேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

CSK, SURESHRAINA, TWEET, BIZARRE