மாற்றுத்திறனாளியை தலைகீழாக 'தொங்கவிட்டு' நெருப்பு வைத்த கொடூரம்!
Home > தமிழ் newsஒடிசா மாநிலத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி சங்கர் நந்தா என்ற நபர் சிறுவயது முதலே நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார்.இருந்தபோதிலும் அவரால் முழுமையாக நடக்க முடியாமல் இருந்தது.மற்றவர்கள் உதவியுடன் தனது பணிகளை மேற்கொண்டு வந்தார்.தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது குடும்பத்தினர் பல கோவில்களுக்கு அவரை அழைத்துச் சென்றார்கள்.
இந்நிலையில் கந்தமால் மாவட்டத்திலுள்ள வாகமுண்டா கிராமத்தில் ஒரு கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றார்கள்.அங்கு தான் அந்த விபரீத பரிகார முறையை பூசாரி தெரிவித்தார். மாற்றுத்திறனாளியான பவானியை தலைகீழாக தொங்கவிட்டு அவருக்கு கீழே நெருப்பு மூட்ட வேண்டும் என்பதுதான்.அவ்வாறு செய்தால் அவரால் முழுமையாக நடக்க முடியும் என்று பூசாரி பவானியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.அதற்கு அவரின் குடும்பத்தினரும் ஒத்து கொண்டார்கள்.
பூஜையை மேற்கொள்வதற்கு நாளும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது.பூஜை செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்பட்ட பவானி சங்கர் தலைகீழாக தொங்கவிடப்பட்டு அவருக்கு கீழே நெருப்பும் பற்ற வைக்கப்பட்டது.எரியும் நெருப்பிற்குமேல் தொங்கவிடப்பட்டிருந்த பவானிக்கு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் நெருப்பின் வெப்பம் தாங்கமுடியாமல் பவானி அலறினார்.
இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென அவரது உடம்பில் நெருப்பு பற்ற ஆரம்பித்தது.உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் தலை மார்பு கை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.கோவிலில் நடந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்திருந்தார்.அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள் .