"கிரிக்கெட் வரலாற்றில் காணாத ரன் அவுட்":அதிர்ந்த பேட்ஸ்மேன்!

Home > தமிழ் news
By |
"கிரிக்கெட் வரலாற்றில் காணாத ரன் அவுட்":அதிர்ந்த பேட்ஸ்மேன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுடான விதம் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

 

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியாவை 145 ரன்களுக்குள் சுருட்டி 137 ரன்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்.

 

3-வது நாள் ஆட்டத்தின்போது 3-விக்கெட் இழந்த நிலையில் 160 ரன்களை எடுத்து பாகிஸ்தான் ஆடிக்கொண்டிருந்தது. களத்தில் அசார் அலி மற்றும் சபீக் ஆகியோர் இருந்தனர்.அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்ததால் பாகிஸ்தான்  ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர்.ஆனால் அந்த நிம்மதி அவர்களுக்கு சிறிது நேரம்கூட நிலைக்கவில்லை.

 

ஆஸ்திரேலிய பவுலர் பீட்டர் சிடில் பந்து வீச, அதனை ஸ்லிப்பில் கட் செய்த அசார் அலி அது பவுண்டரிக்கு சென்றுவிடும் என்று கூலாக இருந்தார். பந்து மெதுவாக உருண்டு சென்று பவுண்டரி லைனுக்கு முன்னால் நின்று கொண்டது.பந்து பவுண்டரியை கடந்து விட்டதாக எண்ணிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இருவரும் நடுக்களத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார்கள.

 

இதற்கிடையே பீல்டர் ஸ்டார்க் பந்தை எடுத்து கீப்பரை நோக்கி வீசினார். இதையடுத்து அசார் அலி ரன் அவுட்  செய்யப்பட்டார்.இதை சற்றும் எதிர்பாராத அவர் என்ன நடந்தது என்றே தெரியாமல் பரிதாபமாக பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

 

இந்த காட்சிகளை கண்ட  பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்தார்கள்.கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு ரன் அவுட் நடப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

CRICKET, PAKISTAN, AZHAR ALI, RUN OUT