'அடுத்த 24 மணி நேரத்தில்'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!

Home > தமிழ் news
By |
'அடுத்த 24 மணி நேரத்தில்'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!

கஜா புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகமான அளவில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த,சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மழை குறித்து விளக்கமாக தெரிவித்தார். அப்போது ‘நேற்று தென் கிழக்கு வங்கப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று தென் மேற்கு வங்கப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்குத் திசையில் நகர்ந்து நாளை, நவம்பர் 20 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளக் கூடும்.

 

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை பெற ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.இதன் காரணமாக, இன்று மாலை முதல் தமிழக மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். அதைத் தொடர்ந்து நாளை மற்றும் மறுநாள் உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும்.எனவே, அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோரங்களில் இருக்கும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.

 

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.நவம்பர் 20 மற்றும் 21 தேதிகளில்,மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைப் பெய்யக் கூடும். 20 மற்றும் 21 தேதிகளைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு மழை பெய்யக் கூடும்' என்று தகவல் தெரிவித்தார்.