‘எந்த உண்மைய இப்ப சொன்னா, தமிழ்நாட்டுல பூகம்பமே வெடிக்கும்?’.. நக்கீரன் கோபால் பதில்!

Home > தமிழ் news
By |

15 வருடங்களாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியாவாக திகழும் பிஹைண்ட்வுட்ஸின் 6-வது கோல்டு மெடல்ஸ் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னை டிரேடு செண்டரில் கோலாகலமாக நடந்தது. ‘ஹானரிங் தி இன்ஸ்பிரேஷன்’ என்கிற நோக்கில், சமூகத்தில் முன்னுதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் வாழும், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.ஆர்.நல்லக்கண்ணு அய்யா, திரு. உ. சகாயம் ஐஏஎஸ், திரு. நக்கீரன் கோபால், ஆசிரியர் திரு. பகவான் மற்றும் கால்பந்தாட்ட நடுவரும் வீராங்கணையுமான ரூபா தேவி உள்ளிட்ட 5 பேருக்கு இந்த ICON OF INSPIRATION என்கிற விருதினை பெருமிதத்துடன் வழங்கி பிஹைண்ட்வுட்ஸ் கவுரவப்படுத்தியது.

‘எந்த உண்மைய இப்ப சொன்னா, தமிழ்நாட்டுல பூகம்பமே வெடிக்கும்?’.. நக்கீரன் கோபால் பதில்!

இவ்விழாவில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.ஆர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் கைகளால், பிஹைண்ட்வுட்ஸ் வழங்கிய தனக்கான ICON OF INSPIRATION விருதினை பெற்ற பின் நக்கீரன் இதழாசிரியர், சமூக ஆர்வலர் திரு. நக்கீரன் கோபால் அவர்கள் பிரம்மாண்ட பிஹைண்ட்வுட்ஸ் மேடையில் பேசத் தொடங்கினார். சிறந்த ஊடகவியலாளராக பெரும் ரிஸ்குகளை எடுத்து உண்மைகளை வெளிக்கொண்டுவந்து மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்த்த நக்கீரன் கோபால் அவர்கள் இந்த விருதினை எப்படி பார்க்கிறார் என்பது பற்றி கேட்டபோது அவர் பேசியதாவது:

‘முதலில் பிஹைண்ட்வுட்ஸூக்கு எனது பெரிய நன்றிகள். அனைவருக்கும் நக்கீரன் கடமைப்பட்டிருக்கிறது. எத்தனையோ வலிகளைத் தாங்கி இந்த மேடைக்கு வர எனக்கு 30 வருடங்களாகியுள்ளது. கோல்டினை தந்திருக்கிறார்களா அல்லது இரும்பினை தந்திருக்கிறார்களா என தெரியவில்லை. அவ்வளவு வெயிட்டாக இருக்கிறது இந்த கோல்டு. இத்தனை வெயிட்டுக்கு கோல்டு கொடுக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் அறிவிப்பை பார்க்கும்போதெல்லாம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். நக்கீரன் குடும்பத்துக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். 2010-ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பாக எனக்கு தந்தை பெரியார் விருது கொடுக்கப்பட்டது.  இன்று வாழுகிற தந்தை பெரியாரான, நல்லக்கண்ணு அய்யா கைகளால் இந்த விருதினை பெறுவதற்கும், ஒரு ஊடகம் இன்னொரு ஊடகத்தை கவுரவிப்பதற்கும் நக்கீரன் குடும்பம் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக்கொள்கிறது.

என் மீது அதிக வழக்குகள் எல்லாம் இல்லை. ஒரு 261 FIR, 3 கொலை கேஸ், 4 கடத்தல் வழக்கு, 1 பொடா வழக்கு, 1 ஆயுத வழக்கு இவற்றையல்லாமல் 111 அவதூறு வழக்குகளும், சமீபத்தில் கவர்னர் போட்ட வழக்கும் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில் இருந்து நான் வெளியே வர 200 வருடங்கள் வேண்டும். ஆனாலும் இந்த வலிகளைத் தாங்கும் பெரும் பலமாக இந்த விருது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. எனக்கு துயரம் வந்தபோது மொத்த தமிழகமும், ஊடகங்களும் எங்களுக்கு தோள்தந்ததை நாங்கள் மறக்க மாட்டோம்.

அய்யா நல்லக்கண்ணு எல்லாம் இந்த வயதிலும் ஹெலிகாப்டரில் செல்லாமல், நடந்து சென்று கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தார்கள். குறிப்பாக திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள், நடிகர் லாரன்ஸ், ரஞ்சித் ஆகியோர் கஜா நிவாரணத்துக்கு தங்கள் பங்களிப்பை கொடுத்தார்கள்.  கூரைக்கு கீழ் இருப்பவர்கள் கூரையே இல்லாதவர்களுக்கு கொடுக்கும் மனப்பான்மையை பாராட்டியாக வேண்டும். அவ்வகையில் பிஹைண்ட்வுட்ஸூம் தனது பங்களிப்பை தந்துள்ளது பாராட்டுதலுக்குரியது’ என்றார்.

இத்தனை சீரியஸாக பேசிக்கொண்டிருந்தவரிடம் இன்னொரு அதிரவைக்கும் கேள்வி கேட்கப்பட்டது. ‘இந்த ஒரு விஷயத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் ஒரு பெரும் பூகம்பமே வெடிக்கும். ஆனால் இதுவரை எங்கேயும் சொன்னதில்லை என்பது போல் எதாவது ரகஸியத்தை கைவசம் வைத்திருக்கிறீர்களா?’என்பதுதான் அந்த கேள்வி. 

அரங்கத்தின் ஆரவாரம் கூச்சலிட பதிலுக்கு ஆயத்தமான நக்கீரன் கோபால், ‘2012-ஆம் ஆண்டு ஒரு உணவுப்பழக்கத்தை ஆதரித்து எழுதியபோது ஆபீஸுக்கு ஒரு 1000 பேர் வந்து அடித்தார்கள். என்னை கொலை செய்யவே முயற்சித்தார்கள் ஆனால் நான் தப்பித்துவிட்டேன். ஆனால் அந்த உணவுப்பழக்கத்தை இப்போது ஆதரித்து பேசுகிறார்கள். இதேபோல் இப்போது பேராசிரியர் ஒருவர் பற்றி எழுதியதற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். நண்பர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் துணைக்கு வந்ததால் வெளிவிட்டார்கள்.  இப்பவும் இந்த மெடல் கொடுத்ததால் நீங்கள் எனக்கு நல்லது நெனைக்கும்னு நீங்க நினைக்கிறீர்களா? ஓரமாக உட்காரச் சொன்னால் உனக்கு மெடல் கேக்குதா என்றுதான் கிளம்புவார்கள். அது இந்த அரங்கத்திலிருந்து வெளியில் சென்றாலே நடக்கும்’ என்று கலகலப்பூட்டினார்.

ICONOFINSPIRATION, NAKKEERANGOPAL, BEHINDWOODSGOLDMEDALS2018