இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர்.கடந்த 7-ம் தேதி இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 6 லட்சம் பேரிலிருந்து 22 பேர் மட்டுமே போர் விமானி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.அந்த 22 பேரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆன்சல் கங்க்வாலும்(24) ஒருவர்.

 

டீக்கடை நடத்தி வரும் இவரது தந்தை சுரேஷ் லோன் வாங்கி ஆன்சலை படிக்க வைத்துள்ளார்.இதுகுறித்து சுரேஷ் கூறும்போது, "எனது மகளின் படிப்புக்காக கடன் வாங்கி படிக்க வைத்தேன். எனது முயற்சி வீண் போகவில்லை. தற்போது எனது டீக்கடை மிகவும் பிரபலமாகி விட்டது. தினசரி ஏராளமான பேர் நேரில் வந்து வாழ்த்துகின்றனர்,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

இந்த வெற்றி குறித்து ஆன்சல் கூறுகையில், "கல்லூரி படிப்புக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் சேர்ந்தேன். ஆனால் விமான படையில் சேர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனவே மிகக் கடினமாக உழைத்து இப்போது போர் விமானி பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன்’’ என்றார்.

 

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் ட்விட்டரில் ஆன்சலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் நேரில் ஆன்சலின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இதுபோல ஏராளமானோர் ஆன்சலுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS