இன்றிரவு 10.30 மணிக்கு விசாரணை.. ஸ்டாலின் கோரிய மனு!
Home > தமிழ் newsதிமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைப் பலனின்றி காவேரி மருத்துவமனையில் காலமானார். முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு நேரில் சென்று, திமுக செயல் தலைவரும் மு.கருணாநிதியின் மகனாருமான மு.க.ஸ்டாலின் 5 முறை முதல்வர் பதவி வகித்த கலைஞரை நல்லடக்கம் செய்ய, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்குமாறு கோரி இருந்தார்.
அப்போது சட்டத்தில் இடம் இருந்தால், முயற்சி செய்வதாக தெரிவித்திருந்தார் முதல்வர். அதன் பின்னர் தலைமை செயல் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் முதல்வருடன் தீவிரமாக ஆலோசித்த பிறகு தமிழக அரசின் சார்பில் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்படி, கலைஞரின் நல்லுடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதால், அண்ணா நிதி மண்டபம் அருகே இடம் ஒதுக்கி தரப்படும், அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கி தர இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்’ என்று அவர் கோரியுள்ளார்.
ஆனால் அதே சமயம், இதே கோரிக்கையை பரிசீலனை செய்யச் சொல்லி உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு நீதிபதி ஹூலுவாடி ரமேஷிடம் திமுகவின் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மனு ஏற்கப்பட்டு இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.