தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனைகளின் மீது விசாரணை கோரி ஆளுநரிடம் மனு அளித்ததாகக் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உறவினர்களுக்கு நெடுஞ்சாலை ஒப்பந்தம் ஒதுக்கித் தந்ததாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், எஸ்பிகே அண்ட் கோ குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த ஆளுநரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியிலும் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரினார். ஆளுநர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ஸ்டாலின் எச்சரித்தார்.