தமிழக அரசின் அழைப்பிதழில்...ஸ்டாலின்,டிடிவி தினகரன் பெயர்களா ?
Home > தமிழ் newsதமிழக அரசின் சார்பில் அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் செப்.30 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அச்சிடப்பட்டிருக்கும் அழைப்பிதழ் தான் அரசியல் நோக்கர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், கனிமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.இது தமிழகத்தின் ஆரோக்கிய அரசியலிற்கு தொடக்க புள்ளியா என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை திமுக, அதிமுக எதிர் எதிர் துருவங்களாக தான் இருந்தது. ஒருவர் இல்லத் திருமணத்தில் இன்னொருவர் கலந்துகொள்ள மாட்டார்கள். காரணம் தலைமைக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகுமோ என்ற பயம் தான்.ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா குறித்து நலம் விசாரித்து ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கினார்.
அதே போல் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல்வர் தனது அமைச்சர்களோடு சென்று நலம் விசாரித்தார்.இதனால் புதிய அரசியல் நாகரிகம் உருவாகுவதாக கருதப்பட்ட நிலையில் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக அதிமுக தலைவர்கள் மீண்டும் மோதிக்கொண்டனர். சமீப காலமாக ஊழல் விவகாரத்தில் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி வாழ்த்துரை என்று போட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே அனைவரையும் ஆச்சரியப்படுத்திருப்பது டிடிவி தினகரன் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருப்பது தான். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஜென்ம வைரியாக பார்ப்பது டிடிவி தினகரனை தான்.ஆனால் அவர் பெயரும் இடம்பெற்றிருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது.