‘ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக முதியவர் எடுத்த முடிவு’.. நெகிழ வைத்த சம்பவம்!
Home > தமிழ் newsபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ரூ.1000 நிதி உதவி செய்த முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு பணத்தை, தள்ளாத வயதிலும் முதியவர் ஒருவர் நிதியாக அளித்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் அருகே உள்ள சரத்துப்பட்டி எம்.ஜி.ஆர் காலணியில் 75 வயதான பொன்னையன் என்பவர் மனைவி கம்மாளச்சியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். தற்போது பொன்னையனும் அவரது மனைவியும் கூலி வேலை செய்து தனியாக வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கலெக்டர் அலுவலகம் சென்று நிதி உதவி அளித்துள்ளார்.
இது பற்றி கூறிய அவர், ‘தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இறந்த செய்தியை வானொலியில் கேட்டேன். அதில் இரண்டு தமிழக வீரர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு நானும் என் மனைவியும் மனம் உடைந்து போனோம். அதனால் நாட்டிற்காக உயிரிழந்த வீரர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். உடனே நாங்கள் கூலி வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்தோம். அதில் ரூ.1000 இருந்தது.
இந்த பணத்தை எப்படி உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு சேர்ப்பது என தெரியவில்லை. மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தால் அக்குடும்பத்திற்கு கொண்டு சேர்த்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதனால் 1000 ரூபாயை ஒரு கவரில் வைத்து கலெக்டரிம் கொடுத்துவிட்டு வந்தேன்’ என கூறினார்.
செய்யும் உதவி திணை அளவாக இருந்தாலும், தானாக மனமுவந்து செய்பவரின் மனம் பனை அளவு பெரியது என்கிற வள்ளுவரின் வாக்கினை இந்த முதியவர் உண்மையாக்கியுள்ளார் என்று அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.