‘மெகா கூட்டணினு நாமளே சொல்லிக்கக் கூடாதுங்க.. மக்கள் சொல்லணும்’: கலாய்த்த கமல்!
Home > தமிழ் newsகடந்த 2017-ஆம் வருடத்தின் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளன்று அரசியல்வாதி கமல்ஹாசனாக முழுமையாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார்.
அந்த நாளில், தான்(கமல்) 40 வருடங்களாக அரசியலில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தனது கட்சிப்பெயரை மதுரை பொதுக்கூட்டத்தில் வைத்து நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.
கமலின் ரசிகர்கள் பலரும் தனக்கு தொண்டர்களாகவும், வேறு கட்சியின் தொண்டர்கள் பலர் கமலுக்கு ரசிகர்களாகவும் மாறிய அந்த நாள்தான் மக்கள் நீதி மய்யம் நடைபோடத் தொடங்கியது. அதன் பின்னர் கமல் படுபிஸி. கிராமங்கள், நகரங்கள், மக்கள், பண்பாடு என விதவிதமான அனுபவங்களை கமல் சேகரிக்கத் தொடங்கினார்.
ஆனந்த விகடனில் முன்னதாக என்னுள் மையம் கொண்ட புயல் தொடரையும் எழுதிக்கொண்டிருந்தார். அந்தத் தொடரின் மூலம் கமலின் மனதில் மையம் கொண்டிருந்த அந்த புயல், மக்கள் நீதி மய்யம் என்பது பின்னாளில் தாமதமாக தமிழர்களுக்கு புலப்பட்டது. மாற்றத்துக்கான முதல் வழியாகவும் தன்னுடைய அரசியல் சுடரின் முதல் ஒளிக்கீற்றாக கமல் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் ஊழல் ஒழிப்பு. அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளமாக இதையே கமல்ஹாசன் ஒவ்வொரு இடத்திலும் முன்மொழிந்தார்.
இந்தியா முழுவதும் சென்று அரசியல் ஜாம்பவான்களிடம் ஆலோசனை கேட்டார். கிராமங்களைத் தத்தெடுத்து மாதிரி கிராமங்களை உருவாக்கும் முயற்சியையும் தொடங்கினார். இப்படி வளர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன். இன்று மதியத்துக்குமேல் நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளையும் கமல் வழங்குறார்.
இதுகுறித்து இன்று பேசிய கமல், ‘தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் எனும் குடும்பம் பரவியுள்ளது, மக்கள் பலம் இருப்பதாலேயே, தேர்தலில் தனியே நிற்பதாக அறிவித்தேன்’ என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ‘மற்றவர்கள்தான் என் பெயரை சொல்லி அழைக்கும்போது மிஸ்டர் கமல் என்று சொல்லவேண்டும். நானே சொல்லிக்கொள்ளக் கூடாது. இதேபோல், மெகா கூட்டணி என்று மக்கள்தான் சொல்ல வேண்டும். தாங்களே சொல்லிக்கொள்ளக் கூடாது’ என்றும் விமர்சித்தார்.
இப்போது தமிழகம் முழுக்க கட்சி கொடி ஏற்றப்பட்டுக் கொண்டுள்ளது. அடுத்து எங்கே ஏற்றிவைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.- @ikamalhaasan #1YearOfMNM#MakkalNeedhiMaiam #Nammavar
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 21, 2019