‘சர்ச்சைக்குரிய ஓவியங்களால் பரபரப்பு’.. மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!
Home > தமிழ் newsதமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் இருந்தும் சமூக கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சார்ந்து இயக்கும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைக்குழுக்களையும், இவற்றில் முனைப்போடு இருக்கும் கலைஞர்களை பாதுகாக்கும் பணி நோக்கோடும் கலை இலக்கிய இயக்கங்கள் லயோலா கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் வீதி விருது விழா என்கிற பெயரில் கலைஞர்கள் கூடும் நிகழ்வுகளை நடத்துவதுண்டு.
தொடர்ந்து 5 ஆண்டுகள் நடந்த இந்த கலை நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 6-ஆம் ஆண்டான இந்த ஆண்டும் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் வீதி விருது விழா 2019 நிகழ்ந்தது. 5000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெற்ற இவ்விழாவில் கருத்துரிமைக்கான அடவுகள், 400 வகையான ஆட்டக் கலைகள், 50 வகையான சமூகம் பேசும் வீதி நாடகங்கள், 250 மூத்த கலைஞர்களுக்கான கெளரவிப்பு உள்ளிட்டவை நிகழத் தொடங்கின. லயோலா கல்லூரியின் கலை -இலக்கிய பிரிவு நடத்திய இவ்விழாவில் நாட்டுப்புற கலை அமைப்புகள், முற்போக்கு எழுத்தாளர்கள், தன்னார்வக் கலைஞர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் உட்பட தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பார்வையாளராக பங்குபெற்ற கலை இலக்கிய ஆர்வலரான இளவரசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நமக்கு அளித்த தகவல்களின்படி, கருத்துச் சுதந்திரத்தை பற்றி நிகழ்ந்த கருத்தரங்களிலும், கஜா புயல் பாதிப்புகள் பற்றிய ஓவியங்களிலும் மத்திய அரசை தாக்கி நிகழ்ந்ததாகவும், கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நிறைய ஸ்டால்களில் இருந்த ஓவியங்கள் குறிப்பிட்ட கட்சியையும், குறிப்பிட்ட மதத்தையும், அதிகாரத்தில் இருக்கும் தனி நபர்களையும் தவறாக சித்தரிக்கும்படியாக இருந்ததாக புகார்கள் எழுந்ததாகவும் கூறினார். இதனால் பலதரப்ப்பட்ட வகையிலும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், லயோலா கல்லூரி நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து லயோலா கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் தங்கள் கல்லூரியில் நிகழ்ந்த வீதி விருது விழாவில் பெரும்பான்மை மக்கள் சார்ந்த குறிப்பிட்ட மதத்தையும், சமூக அமைப்பையும், அரசியல் கட்சியையும், நாட்டின் தலைமைத்துவத்தையும் தவறாக சித்தரித்து இவற்றிற்கு எதிரான கருத்துக்களை பல வடிவங்களிலும் வெளிப்படுத்தியதன் மூலமாக இந்த விழாவை குறிப்பிட்ட சிலர் தவறாக பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறோம்’ என்றும் சமூக அமைதியை சீர்குலைக்கும் எவ்வித போக்கினையும் தங்கள் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்றும், தங்களின் பார்வைக்கு வந்தவுடனேயே அதுபோன்ற சித்தரிப்பு ஓவியங்கள் அகற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#LoyolaCollege Releases an apology press statement for the controversial paintings at their exhibition #VeedhiViruthuVizha pic.twitter.com/exHiUtPveA
— Behindwoods (@behindwoods) January 21, 2019