பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கெடுபிடி: விரிவுரையாளர் தற்கொலை!

Home > தமிழ் news
By |
பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கெடுபிடி: விரிவுரையாளர் தற்கொலை!

சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தரமறுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பொறியியல் துறையை உலுக்கியுள்ளது. 

 

தமிழகம் போன்ற இடங்களில் இருந்து அப்ளையடு என்ஜினியரிங் எனப்படும் முழுமையான கோர் நிறுவனங்களில் பணிபுரிய செல்லும் பொறியியலார்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். எஞ்சியவர்கள் அரசு வேலைகளுக்கு முயற்சிக்கவும், மீதமுள்ளவர்கள் முதுகலை படிப்புகளை பயில்வதோடு, கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றுவதுண்டு. 

 

அப்படித்தான் கடலூரை சேர்ந்த வசந்த வாணன் என்பவர், சென்னை தாம்பரத்தில் பி.இ படித்துள்ளதோடு, அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்றுள்ளார். சில வருடங்கள் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றிய வசந்த வாணன், அண்மையில் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பணிக்கு சேர்ந்துள்ளார். அந்த சமயம் அவரது அசல் மேற்படிப்பு சான்றிதழ்களை நிர்வாகம் வாங்கி வைத்துக்கொண்டது.

 

ஆனால் வசந்தவாணனோ தான், எம்ஐடி-யிலும் வேலைக்கு விண்ணப்பத்துள்ளதாகவும், அந்த வேலை கிடைத்தால் சான்றிதழை  திருப்பி அளிக்குமாறும் கூறியுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் வேலை கிடைக்கவும், தான் பணிபுரியும் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று சான்றிதழ்களை கேட்டுள்ளார். 

 

ஆனால் அந்த தனியார் கல்லூரி நிர்வாகம் மாதக்கணக்கில் இழுத்தடித்துள்ளதோடு, 3 லட்சம் ரொக்கத் தொகையை கொடுத்துவிட்டு சான்றிதழை பெற்றுக்கொள்ளச் சொல்லி வலியுறுத்தியதால், கிடைத்த நல்ல இடத்தில் பணிபுரிய முடியாதுபோன மன உளைச்சலில் வசந்த வாணன், ‘நான் இறந்த பிறகு எனது சடலத்திடமாகவது எனது சான்றிதழை ஒப்படையுங்கள்’ என்று நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இதை அலுவல் ரீதியாகவும், போலீசார் இதை சட்ட ரீதியாகவும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளை பொறுத்தவரை, தனது நிறுவனத்தில் பணிபுரிவர் வேறு ஒரு கல்லூரிக்கு சென்றுவிடக் கூடாதென இவ்வாறு செய்வதாகவும், நிறைய கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இதுமாதிரி செய்வதாகவும் பலர் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். 

SUICIDE, TAMILNADU, LECTURER, ENGINEERINGCOLLEGE, AICTE, UGC