சபரிமலையில் சேதமான பேருந்துகளால் அரசுக்கு ரூ.1.25 கோடி இழப்பு: டிஜிபி அதிரடி யோசனை!
Home > தமிழ் newsபெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்வதற்கான தடை நீக்கப்பட்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு செல்வதற்கான தடையின்மையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கோவிலுக்குள் செல்ல முற்பட்ட 9 பெண்களில் ஒருவர் கூட சன்னிதானத்தை நெருங்க முடியாத அளவுக்கு போராட்டக்காரர்களின் போராட்டம் வலுக்கவும் செய்தது. எனினும் பத்திரிகையாளர் கவிதா, சமூக செயற்பாட்டாளர் ரெஹான என இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையை நெருங்கும்போது போராட்டம் மேலும் வெடித்ததால், பந்தள மன்னர் சபரிமலையை இழுத்து மூட உத்தரவிடுவதாகச் சொல்லி அச்சுறுத்தினார்.
ஒருபுறம் கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆர் எஸ் எஸ், சங் பரிவார் அமைப்புகளை குற்றம் சாட்டவும், எச்.ராஜா அவரை இந்து விரோதி என விமர்சிக்கவும், இன்னொரு புறம் ஊடகவியலாளர்கள், பெண்கள், ரெஹானாவின் கொச்சி வீடு என ஆங்காங்கே தாக்குதல்களும் நிகழ்ந்தன.
இறுதியில் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு சபரிமலை சன்னிதானமும் நேற்றைய தினமான திங்கள் (அக்டோபர் 22) அன்று மூடப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டக் கலவரத்தில் சேதமான அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.1.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள போக்குவரத்துக்கழகம், அதற்கான வருவாய் இழப்பை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்கக் கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.