ஐபிஎல் போட்டிகளில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ரஷீத் கானை, இன்று ஐபிஎல் போட்டிகளில் கொண்டாடுகின்றனர் என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

 

சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானின் பந்துவீச்சைக் கண்டு, அனைத்து பேட்ஸ்மேன்களும் இந்த ஐபிஎல் போட்டிகளில் மிரண்டனர் என்றால் அது மிகையல்ல.அப்படிப்பட்ட ரஷீத் கானை ஒரு காலத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு வேண்டாம் என்று இந்திய வீரர்கள் ஒதுக்கிய சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய முன்னாள் வீரருமான லால்சந்த் ராஜ்புத் கூறுகையில், " நான் பயிற்சியாளராக இருந்த 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ரஷீத் கானை சேர்த்தேன். அவரது சுழற்பந்து வீச்சு நன்றாக இருந்தது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் ரஷீத் விளையாடினால் நன்றாக இருக்கும் என கடந்த 2016-ம் ஆண்டு சேவாக்கை அழைத்து ரஷீத் பற்றி கூறினேன்.அதற்கு அவர் எங்களுக்கு இப்போது ஆல்ரவுண்டர் கள் தான் தேவை என நிராகரித்து விட்டார்.

 

பின்னர் கம்பீரை அழைத்துக் கூறினேன். எங்களிடம் குல்தீப், நரேன் இருக்கிறார்கள் என்று கம்பீரும் நிராகரித்து விட்டார். அதன் பின் ஹைதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணனை அழைத்து ரஷீத் பற்றிக் கூறினேன். நீங்கள் அவர் விளையாடுவதைப் பார்த்து அதன்பின்னர் தேர்வு செய்தால் போதும் என்றேன்.

 

அதன் பின்னர் லட்சுமணன் நேரில் வந்து ரஷீத் விளையாடுவதைப் பார்த்து அதன்பின்னர் அவரைத் தேர்வு செய்தார்.இப்போது ஐபிஎல் போட்டியில் தலைசிறந்த பந்துவீச்சாளராக ரஷீத் இருந்து வருகிறார். ஒருநேரத்தில் ஐபிஎல் அணிகளால் ஒதுக்கப்பட்ட ரஷீத் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறார்,'' என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS