நாங்க எப்போ அப்படி சொன்னோம்...700 கோடி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் !

Home > தமிழ் news
By |
நாங்க எப்போ அப்படி சொன்னோம்...700 கோடி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் !

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரசு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்க முடிவெடுத்துள்ளது என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். அதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, வெளிநாடுகள் சார்பில் வழங்கப்படும் நிதியுதவிகளை தாங்கள் பெறுவதில்லை என இந்தியா அறிவித்தது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

 

இருந்தபோதிலும், மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வந்தனர்.

 

இந்தநிலையில் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று அந்நாட்டுத் தூதர் அகமது அல்பானா விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்த சூழ்நிலையில், மேற்குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக  ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பானா நேற்று முன்தினம் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளச் சேதங்கள் குறித்தும், அதற்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும் ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, தேசிய அவசரக் குழு ஒன்றினை ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது ரஷீத் மக்தோம் அமைத்துள்ளார்.

 

அந்தக் குழு தமது பணியை செய்து வருகிறது. மேலும், இந்தியாவின் நிதியுதவிக் கொள்கை குறித்து தெரியவந்த பிறகு, அந்நாட்டு அரசிடமும் ஆலோசித்து வருகிறோம். இதற்கிடையே, கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.700 கோடியை ஐக்கிய அரபு அமீரகம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.