Looks like you've blocked notifications!

கடந்த திங்கட்கிழமை அன்று, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமிற்கு  வந்த சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராக்கம்மாள் (80) என்ற மூதாட்டி, தனக்கு முதியோர் உதவி தொகை வழங்க உத்தரவிட வேண்டும், என மனு அளித்திருந்தார்.

 

மேலும் மனு அளிக்க வந்தபோது ராக்கம்மாள் பாட்டி ஆட்சியர் அன்பழகனிடம், "எனக்கு எந்த சொந்தங்களும் இல்லை. வருமானம் இல்லாமல் கிராமத்தில் தனியாக, ஒரு குடிசை வீட்டில் வாழ்கிறேன்.

 

ஒரு வேளை கூட நல்ல சாப்பாடு சாப்பிட முடியல ராசா,  உன்னை என் மகனாக நினைத்து கேட்கிறேன் உதவி செய்'' என்று கண்கலங்கக் கூறியுள்ளார்.

 

மூதாட்டியின் வறுமை நிலையை கண்டு கலங்கிய ஆட்சியர், அவருக்கு உதவித்தொகை அளிக்க உத்தரவிட்டது மட்டுமில்லாமல், தானே அவருடைய வீட்டிற்கு போய் உதவி தொகைக்கான ஆணையையும் வழங்க முடிவு செய்துள்ளார்.

 

அதன்படி, தன் வீட்டில் இருந்து சாம்பார், ரசம், பொரியலுடன் உணவை எடுத்துக் கொண்டு ராக்கம்மாள்  மூதாட்டி வீட்டிற்கு சென்று அந்த உணவை அளித்துள்ளார்.

 

ஆட்சியரின் அன்பை கண்டு நெகிழ்ந்த மூதாட்டி, ஆட்சியரையும் தன்னோடு சேர்ந்து உணவருந்த அழைத்துள்ளார். மூதாட்டியின் அன்பை ஏற்று ஆட்சியரும் அவருடன் சேர்ந்து உணவருந்தி உள்ளார்.

 

பின்பு, உதவி தொகைக்கான ஆணையை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் ஆட்சியர். இதைப்பார்த்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், கிராம மக்கள் ஆட்சியரின் செயலை வியந்து பாராட்டியுள்ளனர்.

BY SATHEESH | APR 2, 2018 4:26 PM #KARURDISTRICTCOLLECTOR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS