கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு: ரூ.54 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்க துறை!
Home > தமிழ் newsமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு சொந்தமாக இந்தியா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத் துறை.
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நடந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி.
சிபிஐ, இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத் துறை, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளது. கொடைக்கான் மற்றும் ஊட்டியில் இருக்கும் சொத்துகள், மத்திய டெல்லியில் இருக்கும் பிளாட், இங்கிலாந்தில் இருக்கும் வீடு, பார்சிலோனாவில் இருக்கும் டென்னிஸ் க்ளப், உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத் துறை, பிஎம்எல்ஏ சட்டத்துக்குக் கீழ் முடக்கியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம் "மிகவும் வினோதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. தலைப்புச் செய்தியாக இந்த விவகாரத்தை மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சொத்துகளை முடக்க வெளியிடப்பட்டிருக்கும் ஆணை, நீதிமன்றத்திற்கு முன் நிற்காது. இந்த ஆணைக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்’ என தெரிவித்துள்ளார்.
A bizarre and outlandish ”Provisional Attachment Order” which is not based on law or facts but on crazy conjectures. This is meant only to grab ”headlines”. The ”order” will not withstand judicial scrutiny, review or appeal. Will approach the appropriate legal forum. @Nidhi https://t.co/Cuh5D2hcJn
— Karti P Chidambaram (@KartiPC) October 11, 2018