‘அசௌகரியங்களால் ராஜினாமா; தவறை உணர்ந்ததால் மன்னிப்பு’: இயக்குனர் கே.பாக்யராஜ்!
Home > தமிழ் newsசர்கார் படக்கதை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்த நிலையில், தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாக்யராஜ், ‘சர்கார் விவகாரத்தில் வருண் பக்கம் நியாயம் இருந்ததால் தலையிட்டேன். செய்ய வேண்டியதை நியாயமா செஞ்சு முடிக்க முடிஞ்சுது. ஆனாலும் முறையா தேர்தலில் நிக்காம, எல்லாரின் ஏகோபித்த மனங்களால் தலைவர் பொறுப்பை நான் ஏற்றதால் சர்கார் பட விவகாரம் தொட்டு சில அசௌகரியங்களை சந்திக்க வேண்டி இருந்தது. சங்கத்தில் இருக்கும் சில ஒழுங்கீனங்களை சரி செய்யனும்னா அனைவரும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று என் போன்று நினைப்பவர்கள் ராஜினாமா செய்யுங்கள். அதன் பிறகு முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக ஆனால் நான் செய்ய வேண்டியவற்றை செய்றேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘தனக்கு நேர்ந்த ஒழுங்கீனங்கள் மற்றும் அசௌகரியங்கள் குறித்து, சங்க நலன் நற்பெயர் கருதி வெளியிட விரும்பல’ என்று கூறியவர், ‘முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படாததாலேயே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் சர்கார் பட கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் என் தவறு என உணர்ந்து சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’என்று தனது ராஜினாமா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.