ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் 1100 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கிட, திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தியாவில் டெலிகாம் சந்தையைத் தொடர்ந்து பிராட்பேண்ட் சேவையினை தொடங்கிட ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான சோதனை ஏற்பாடுகள் கடந்த 2016 செப்டம்பர் மாதத்திலேயே துவங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் வாடிக்கையாளர்களைக் கொண்டு அதிகாரப்பூர்வ சோதனைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

 

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும்.

 

துவக்கத்தில் ஜியோ ஃபைபர் இணைப்புக்கு பாதுகாப்பு முன்பணமாக ரூ.4500 வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் ஜியோ ரவுட்டர் இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், இதே ரவுட்டர் கொண்டு IPTV மூலம் தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தலைமை தி்ட்ட வல்லுநர் அனுஷ்மன் தாக்குர் தெரிவித்திருக்கிறார்.

 

இதுவரை இந்தியா முழுக்க சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவியிருப்பதால், விரைவில் இத்திட்டம்  பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | MAY 6, 2018 3:58 PM #RELIANCEJIO #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS