’எந்திரன்’ ஸ்டைலில் காப்பி அடித்த ஏஎஸ்பி பணிநீக்கம்!
Home > தமிழ் news
எந்திரன் திரைப்படத்தில், ரோபோ ரஜினி புளூடூத், டிரான்ஸ்மிட்டர் மூலமாக ஐஸ்வர்யா ராய்க்கு, பரீட்சை எழுதவேண்டிய பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். அதனைக் கேட்டுதான் ஐஸ்வர்யா ராய் தேர்வெழுதிக் கொண்டிருப்பார். இதே போன்று நூதனமான முறையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காப்பி அடிக்க முயன்று தோற்றிருக்கின்றனர்.
ஆனால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பில் இருந்த அதிகாரியும், நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக இருந்தவருமான சபீர் கரீம் இதே தவறைச் செய்து பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரும், தமிழ்நாடு கேடருமான சபீர், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த யுபிஎஸ்சி தேர்வில் புளூடூத் வைத்து காப்பி அடிப்பதற்காக தேர்வு அறைக்குள் 2 செல்போன்களை மறைத்தபடி எடுத்துச் சென்றார். பின்னர் புளூடூத் மைக்ரோ கேமிரா மற்றும் கூகுள் டிரைவ் மூலம் காப்பி அடித்துள்ளார். இதற்கு உதவிய அவருடைய மனைவியும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனராக இருந்த அவரது நண்பரும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்பட்ட, சபீர் அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கைக்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் விசாரணை முடிவாக, சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு ஏஎஸ்பி அதிகாரி இதுபோன்று பதவி நீக்கம் செய்யப்படுவது, தமிழக ஐபிஎஸ் வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.