100 வருடம் பழமை.. 100 கோடி மதிப்பு: சிலை கடத்தல் ஐ.ஜி. அதிரடி ஆய்வு!
Home > தமிழ் newsதமிழ்நாட்டில் பெருகி வரும் சிலை கடத்தல் தொடர்பான புகார்களை ஐ.ஜி.பொன்.மாணிக்கவெல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிலைகள் கடத்தல் தொடர்பாக ரன்வீர் ஷா என்பவர் வீட்டை இடித்து சோதனை செய்யப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பாக வந்த புகாரை அடுத்து சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷாவின் வீட்டின் ஒருபகுதியினை, கும்பகோணம் நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் தலைமையிலான கூடுதல் எஸ்.பி. அசோக் நடராஜன் கூறும்பொழுது, சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் ஆய்வு செய்ததில், தமிழ் கோவில்களில் வழிபாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த புராதன தொன்மை வாய்ந்த இந்த சிலைகளை பறிமுதல் செய்ததாகவும், அவற்றில் 20 நந்தி சிலைகள், 4 ஐம்பொன் சிலைகள், 22 தூண் சிலைகள், 12 உலோகச் சிலைகள், 56 கற்சிலைகள் உள்ளிட்ட 89 பழங்கால பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் 100 வருடங்களுக்கு மேல் பழமையான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலைகள் கைமாற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என்று கூறியவர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் சொந்த பணத்திலேயே சிலைகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், அதன் பின்னர் கணக்கு எழுதி அனுப்பி எஸ்.பி மூலமாகவே அரசிடம் இருந்து அதற்கான தொகை பெறப்படுவதாகவும் குறிப்பிட்டவர், அந்நிலை மாறி, நேரடி துறை சம்மந்தப்பட்டவர்களின் கணக்குக்கே செலவீனங்கள் வந்து சேரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.