'தோனி இருந்தா கண்ண மூடிக்கிட்டு பந்து வீசுவேன்'.. கிரிக்கெட் வீரர் அதிரடி!
Home > தமிழ் newsதோனி விக்கெட் கீப்பராக இருக்கும்பட்சத்தில் கண்களை மூடிவிட்டு பந்து எறிவேன் என ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும் ,முன்னாள் கேப்டனுமான தல தோனி தற்போதைய நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்புக்கு தானும் ஒரு காரணமாக விளங்கும் அளவுக்கு மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ், ‘தோனி விக்கெட் கீப்பராக இருந்துக் கொண்டே கூட, இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்து வீச்சாளர்களுக்கு பயன்படும் வகையில் முக்கியமான நேரத்தில் முக்கியமான ஆலோசனையை கொடுப்பார்’ என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், தற்போது 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. நியூஸிலாந்து மண்ணில் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்ற இந்திய அணியை பார்த்துவிட்டு நியூஸிலாந்து இரண்டாவது போட்டியை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையுடன் இருக்கப் போவதாக அறிவித்திருந்தது. ஆனாலும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதிலும் 2-வது ஒருநாள் போட்டியை பொருத்தவரை, மகேந்திர சிங் தோனியுடனான கூட்டணியில் களமிறங்கிய கேதர் ஜாதவ் 22 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். மேலும் இந்த போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்பு, தற்போது இந்திய அணி மூன்றாவது தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தோனியைப் பற்றி கேதர் ஜாதவ் கூறியுள்ள மிக முக்கியமான பாசிட்டிவ் கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி, ‘ஆட்டக்களத்தில் தோனி விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் அவர், தனக்கு எதிரே இருக்கும் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவார்’ என்று கேதர் ஜாதவ் கூறியுள்ளார். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் குல்தீப் யாதவ், சஹால் ஆகியோருக்கும் தனக்கும் தோனி பந்து வீசுவதற்கு முன்னாள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்றும் அதனால்தான் தாங்கள் திறம்பட ஆட முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று தோனி விக்கெட் கீப்பராக இருந்து தங்களை வழிநடத்தும் பட்சத்தில் கண்களை மூடிக்கொண்டு பந்து எறிவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.