செல்போன் சார்ஜரால் பெண்கள் விடுதியில் தீவிபத்து.. 5 பேர் படுகாயம்.. சோக பின்னணி!
Home > தமிழ் newsசென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் நிகழ்ந்துள்ள தீவிபத்துச் சம்பவம் 5க்கும் மேற்பட்ட விடுதி பெண்களை படுகாயமடைய வைத்துள்ளது.
சென்னை சூளைமேட்டில் உள்ளது மகேஷ் என்பவருக்கு சொந்தமான பெண்கள் விடுதி. கல்லூரி பெண்கள், வேலைக்குச் செல்வோர் உட்பட 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்த இந்த விடுதியில் பலரும் பொங்கல் விடுமுறையை கழிக்க வெளியூர் சென்றிருந்துள்ளனர்.
இந்த சமயத்தில்தான் இந்த ஹாஸ்டலில் திடீரென தீவிபத்து உண்டாகியுள்ளது. தகவல் அறிந்ததும், விடுதியின் உரிமையாளர் மகேஷ் என்பவர், தீவிபத்து நடந்துகொண்டிருக்கும்போதே பெண்கள் விடுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு தீயினால் விபத்து ஏற்பட்டு படுகாயம் உண்டானதால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் நடந்த இந்த தீவிபத்தில், 5க்கும் மேற்பட்ட விடுதி பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்ததோடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடந்த இந்த தீவிபத்து பற்றி தீயணைப்புத் துறை போலீஸார் விசாரிக்கும்போது கிடைத்த தகவல்களின்படி, விடுதியில் செல்போனை பயன்படுத்தியுள்ள பெண்கள் செல்போனை சார்ஜ் போட்டிருந்ததாகவும், திடீரென அந்த சார்ஜர் வெடித்ததாகவும் சார்ஜர் வெடித்ததால் உண்டான ஷார்ட்-சர்க்யூட்டால் மின்சாரம் பாய்ந்து வெடித்து விபத்து உண்டாகியதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே ஒரு செல்போனுக்கு பொருந்தாத வோல்டேஜ் அம்சங்களையுடைய சார்ஜரை பயன்படுத்துவதாலும், சார்ஜ் போட்டிருக்கும்போது செல்போனில் இண்டர்நெட்டை ஆன் செய்திருந்தாலும், சார்ஜ் போட்டிருக்கும்போது செல்போன் பேசும்பொழுதும் விபத்து உண்டாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.