இறந்த நடிகரின் பூத உடலுடன் செல்ஃபி.. செவிலியர்கள் பணிநீக்கம்!

Home > தமிழ் news
By |
இறந்த நடிகரின் பூத உடலுடன் செல்ஃபி.. செவிலியர்கள் பணிநீக்கம்!

செல்ஃபி எடுக்கும் மோகம் ஒரு வரையறை இல்லாமல்  தற்போது சென்று சென்று கொண்டிருக்கிறது. திருச்சியில் காவேரி ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்றபோது சிறுவன் ஆற்றில் தவறி விழுந்து இறந்த சோக சம்பவம் நடந்தது.இந்நிலையில் சாலைவிபத்தில் உயிரிழந்த தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி எடுத்த 4 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும்,  ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, நல்கொண்டா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தார். காருக்குள் படுகாயமடைந்தநிலையில் கிடந்த ஹரிகிருஷ்ணாவை நலகொண்டா மாவட்டம், நார்கெட்பள்ளியில் உள்ள காமினேனி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் ஹரிகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

இந்நிலையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் அருகே மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு ஆண் செவிலியர் உள்பட 4 பேர், சிரித்தபடி  செல்ஃபி எடுத்தனர்.இது சமூகவலைத்தளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.'விபத்தில் மரணமடைந்த ஒருவரின் உடலுடன், அதுவும் சிரித்தபடி செல்ஃபி எடுப்பது மனிதத்தன்மையற்ற செயல்' எனக் கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அந்த 4 பேரையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

 

இந்தச் சம்பவத்துக்காக மருத்துவமனை நிர்வாகம், ஹரிகிருஷ்ணா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்"நாங்கள் ஹரிகிருஷ்ணா குடும்பத்தினரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெறுபவர்களை குடும்பத்தில் ஒருவராகவே பாவிக்கிறோம். நோயாளிகளின்  தனிநபர் சார்ந்த  உரிமைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனினும், இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TELANGANA, ACTOR, ACCIDENT, HARIKRISHNA