இனி இந்த வசதிகளை நீங்க 'வாட்ஸ் அப்'பிலேயே பயன்படுத்தலாம்!

Home > தமிழ் news
By |
இனி இந்த வசதிகளை நீங்க 'வாட்ஸ் அப்'பிலேயே பயன்படுத்தலாம்!

இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கான இணையற்ற கண்டுபிடிப்புகள்தான் பேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும்.  பேஸ்புக் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மற்ற சமூக வலைதளங்கள் தங்கள் ஷட்டரை இழுத்து மூடின. எனினும் அவை பெருமளவில் பயனாளர்களை சென்றடையாமல் இருந்ததும், சமூக வலைதளத்துக்கு உண்டான எல்லாவிதமான அம்சங்களும் முழுமை பெறாமல் இருந்ததும் அவற்றின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆனால் இவை எல்லாவற்றையும் அடியோடு மாற்றி, வீரியமான சமூக வலைதளமாக பேஸ்புக் காலூன்றியது. ஆனாலும் தகவல் பரிமாற்றத்துக்கான பெரும் தளமாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் பெரிய பின்னடைவைச் சந்தித்து வந்தது.

 

அந்த சமயத்தில் ’100 மெசேஜ்கள் மட்டுமே’ ரக பாக்கேஜ்களை போட்டுக்கொண்டு எஸ்எம்எஸ் அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு வரமாய் வந்ததுதான் வாட்ஸ் அப். புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ என எதுவாயினும் இணையதளம் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பகிரலாம் என்ற சிறப்பம்சங்களோடு வந்த வாட்ஸ் அப்பை, பின்னாளில் வாங்கி தன்னோடு இணைத்துக் கொண்டதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களையும் தன் வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொண்டது  பேஸ்புக்.

 

வீடியோ காலிங், வாட்ஸ் அப் குரூப் சாட்டிங், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், வாட்ஸ் அப் வெப், ஒரே நேரத்தில் பலருக்கும் தனித்தனியாக ஒரே மெசேஜை அனுப்பும் வசதி உள்ளிட்ட பலவிதமான வசதிகளுடன் வாட்ஸ் அப் வலம் வந்து கொண்டிருந்தது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் சொல்படி, இதன் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 பில்லியன் நிமிடங்களுக்கு குறையாமல் மேற்கூறிய வசதிகளை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் ஸ்கைப் போன்ற தளங்களில் இருக்கும் குரூப் வீடியோ காலிங், குரூப் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட அம்சங்கள் வாட்ஸ் அப்பில் இல்லாமல் இருந்தன.

 

அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அண்மையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய குரூப் வீடியோ காலிங் மற்றும் குரூப் வாய்ஸ் காலிங் வசதிகளை பலரும் வரவேற்றுள்ளனர். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐபோன் என எல்லா வகையான ஸ்மார்ட் போன்களிலும் இயங்கக் கூடிய இந்த வசதியை தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்ததில் மகிழ்ச்சியளிப்பதாக நெகிழ்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

 

#இனி இதுலயே ஆபீஸ் மீட்டிங் நடத்துவாய்ங்களே!

WHATSAPPUPDATE, WHATSAPP, FACEBOOK, WHATSAPPUPDATES, NEWFEATURES