முதல்வர் பற்றி அவதூறாக பேச மேத்யூவுக்கு தடை; சயன், மனோஜுக்கு புதிய உத்தரவு!

Home > தமிழ் news
By |

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் என்கிற மேத்யூஸ் கோடநாடு தொடர்பான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது மிக அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

முதல்வர் பற்றி அவதூறாக பேச மேத்யூவுக்கு தடை; சயன், மனோஜுக்கு புதிய உத்தரவு!

அந்த ஆவணப்படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பற்றியும் அங்கு நடந்த தொடர்கொலைகள் பற்றியும் பேசியதோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மீதும் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு உதவியவர்கள், அந்த ஆவணப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியவர்கள் என 7 பேருக்கு முதல்வரை பற்றி அவதூறாகவும் ஆதாரமற்றும் பேசுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னதாக கோடநாடு விவகாரத்தில், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில், இத்தகைய ஆவணப்படத்தை, தவறான சித்தரிப்புகளுடனும், ஆதாரங்களற்றும் எடுத்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதோடு, தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை ஆவணப்படத்தின் மூலம் பரப்பியதால், மேத்யூஸிடம் இருந்து மான நஷ்ட ஈடாக ரூ.1.10 கோடி கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். 

இதனையடுத்து கோடநாடு பற்றியும், முதல்வர் பற்றியும் ஆதாரமில்லாத ஆவணங்களை வெளியிடுவதற்கும், முதல்வரை பற்றி அவதூறாக பேசவும், மேத்யூஸ் உள்ளிட்ட 7 பேருக்கு நேற்று (ஜனவரி 23, 2019) தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதேபோல் கோடநாடு கொள்ளை மற்றும் கொலை விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சயன் மற்றும் மனோஜ் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் ஜாமினை ரத்து செய்யக்கோரி, உதகை நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது. அதேசமயம் சயன், மனோஜ் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.  இதனை விசாரித்த நீதிமன்றம் சயன், மனோஜ் இருவரையும் வரும் ஜன.29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

இதே நேரம் சென்னையில் இன்று காலை ஆளுநர் மாளிகை அருகே, கோடாநாடு விவகரத்தில் முதல்வர் மீது குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திமுகவினர் கைதாகினர். 

EDAPPADIKPALANISWAMI, MADRASHIGHCOURT, MATHEWSAMUEL, KODANADISSUE