கேரளாவே மிரண்ட 'இளம் பெண் மாயமான' வழக்கில் அதிரடி திருப்பம்!
Home > தமிழ் news10 மாதங்களாக கேரளாவையே பதற்றமாக வைத்திருந்த முக்கியமான வழக்கில் திடீர் துப்பு துலங்கியதால் வழக்கில் பெரும் திருப்பம் உண்டாகியுள்ளது. கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள முக்கூட்டுதாராவைச் சேர்ந்தவர் ஜெஸ்னா ஜேம்ஸ் என்னும் இளம் பெண்.
காஞ்சிரப்பள்ளி அருகே உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்ற இவர், 2018 மார்ச் மாதம் 22 -ஆம் தேதி, விடுமுறையை கழிக்க, தன் அத்தை வீட்டுக்கு செல்லும் பொருட்டு, முக்கூட்டுதாராவில் இருந்து, பேருந்தில் ஏறி எருமேலி என்னும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
கடைசியாக அந்த பெண் முண்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த சிசிடிவி காட்சிகள் மட்டுமே மிஞ்சியது, ஆனால் காணாமல் போன அந்த பெண்ணோ 10 மாதங்களாகியும் கிடைக்கவில்லை. வெறும் மிஸ்ஸிங் கேஸ் என்று, போலீஸ் இதை அலட்சியமாக விடுவதற்கு மாணவர்கள் அனுமதிக்கவில்லை. பெரும் போராட்டங்களே எழுந்தன. உயர்நீதிமன்றம், மீடியா என்று கேரளாவையே பரபரப்பாக்கிய இந்த வழக்கை விசாரிக்க, 15 பேர் கொண்ட சிறப்பு காவல் படையையும் போலீசார் அமைத்தனர்.
இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பமாக துப்பு துலங்கியுள்ளது. அதன்படி, முண்டயக்கம் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டதன் பேரில் ஜெஸ்னா, ஒரு கடைக்குள் செல்வதும், அவர் சென்று 6 நிமிடம் கழித்து ஒரு ஆண் அதே கடைக்குள் செல்வதுமான வீடியோ ஒன்றும், பிறகு இன்னொரு வீடியோவில், ஒரு சிவப்பு காரும், அதில் ஜெஸ்னாவுடன் இரண்டு பேரும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் இவ்வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.